டெல்லி: மத்திய அமைச்ச்ர ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கும் என உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான். அவரது உடல்நிலை மேலும் மோசமானதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு நாடு முழுவதும உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராம் விலாஸ் பஸ்வானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராம் விலாஸ் பஸ்வானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று டெல்லி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். ராம் விலாஸ் பஸ்வானின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய அரசியல் மற்றும் மத்திய அமைச்சரவையில் பஸ்வான் இல்லாதது எப்போதும் உணரப்படும். ஏழைகளின் நலன் மற்றும் பீகாரின் வளர்ச்சி குறித்த அவரது கனவை நிறைவேற்ற மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். புறப்பட்ட ஆத்மாவின் அமைதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.