காசியாபாத்

த்திய அமைச்சரும் காசியாபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான ஜெனரல் வி கே சிங் ராமர் விரும்பும் போது அவருக்கு கோவில் கட்டப்படும் என கூறி உள்ளார்.

பாஜக சென்ற முறை நடந்த மக்களவை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான ராமர் கோவில் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.   ஆனால் ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியும் அது குறித்த நடவடிக்கைகளை மோடியின் பாஜக அரசு மேற்கொள்ளவில்லை.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் மற்றும் பல இந்துத்துவா அமைப்புகளுக்கு இதனால் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி உண்டானது.   தற்போதைய மக்களவை தேர்தல் அறிக்கையிலும் பாஜக அயோத்தியில் இம்முறை அவசியம் ராமர் கோவில் கட்டப்படும் என மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளது.

காசியாபாத் தொகுதியில் மத்திய அமைச்சர் ஜெனரல் வி கே சிங் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.   அவர் இன்று நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் தனது வாக்கை அளித்தார்.  அதன் பிறகு செய்தியாளர்களிடம் விகே சிங் பேசினார்.

அப்போது சிங், “ராமர் தாம் பிறந்த இடத்தில் இருந்த மசூதியை அகற்ற வேண்டும் என முதலில் விரும்பினார்.  அது அகற்றப்பட்டது.   அது போல அவர் எப்போது தனக்கு கோவில் அமைக்க வேண்டுமென விரும்புகிறாரோ அப்போது  பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படும்” என தெரிவித்துள்ளார்.