டெல்லி: ராமர் கோயிலின் வலுவான அஸ்திவாரத்திற்கான மாதிரிகளை பரிந்துரைக்க ஐஐடி பல்கலைக்கழகங்களை ராமர் கோயில் அறக்கட்டளை கேட்டுள்ளது.
ரூ.1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக வலுவான கான்க்ரீட் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, கோயில் கட்ட உள்ள இடத்தில் 200 அடிக்குக் கீழே மண் தளர்வாக இருப்பதாகவும், ஆகையால் கட்டுமானம் உறுதியாக இருக்காது என்பதும் பரிசோதனையில் தெரிய வந்தது.
இந் நிலையில், பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவின் தலைமையில் கோயிலின் கட்டுமான குழுவானது முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, சரயு ஆற்றின் நீரோடை கோயிலுக்கு கீழே பாய்கிறது என்பதால் அஸ்திவாரத்திற்கான தற்போதைய மாதிரி சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ராமர் கோயிலின் வலுவான அஸ்திவாரத்திற்கான மாதிரிகளை பரிந்துரைக்க ஐஐடியிடம் ராமர் கோயில் அறக்கட்டளை கேட்டுள்ளது. இதுதவிர கட்டுமானம் குறித்து 2 முக்கிய அம்சங்கள் பற்றியும் கோயில் அறக்கட்டளை குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.