லக்னோ: அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் நிகழ்ந்த அரசியல் இப்போது விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு, அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 1951ம் ஆண்டு சோம்நாத் ஆலய மறுகட்டுமான நிகழ்வில், அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் கலந்துகொண்ட நிகழ்வோடு, இதை சிலர் ஒப்பிடுகின்றனர். ஆனால், இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
அயோத்தி விஷயத்தை முன்வைத்து, பாரதீய ஜனதாவை பெரிய கட்சியாக வளர்த்த அத்வானி, இந்த விழாவில் மோசமாக புறக்கணிக்கப்பட்டுள்ளார். மேலும், ராமர் கோயில் தொடர்பான இந்துத்துவா அரசியல் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்ற முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரும் இந்த விழாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அத்வானி உள்ளிட்ட சிலர், இன்னும் நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த விழாவில் மிக திட்டமிட்டு, நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பால்தான் ராமர் கோயில் சாத்தியமானது என்பது மறைக்கப்பட்டு, மோடியால்தான் சாத்தியமானது என்ற ஒரு பிம்ப அரசியல் இந்த நிகழ்வின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.