பெங்களூரு:

ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் நிறுவனம் பிரமோத் முத்தலிக். 2009ம் ஆண்டு மங்களூரு பப் மீது நடந்த தாக்குதலுக்கு பின் இவர் பிரபலமானார். ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் மூலம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இவர் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அதில், ‘‘எனது எதிரிகள் யார்? என்பது எனக்கு தெரியும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்றவர்கள் தான் எனக்கு எதிரானவர்கள். ஆனால், இவர்கள் எனக்கு தெரிந்த எதிரிகள். அவர்கள் எனக்கு எதிராக வேலை செய்வார்கள். ஆனால், நான் எனது உடன் இருப்பவர்களை பற்றி தான் கவலைப்படுகிறேன். அவர்களால் தான் எனக்கு ஆபத்து. விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு என்ன நடந்ததோ அதே போல தான் எனக்கு நடக்க இருக்கிறது.

கர்நாடகா ஆர்எஸ்எஸ் தலைவர் மங்கேஷ் பிந்தேவுக்கு என்னை பிடிக்கவில்லை. அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்ல எம்பி பிரகலாத் ஜோஷி ஆகியோரது ஆதரவு உள்ளது. நான் வடக்கு கர்நாடகாவில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. எனது புகழ் அவருக்கு பிடிக்கவில்லை. நான் பல சாதனைகளை புரிந்துள்ளேன்.

ஆர்எஸ்எஸ் பணிக்காக எனது 40 ஆண்டு கால வாழ்க்கையை இழந்துவிட்டேன். என்னை போல் ஆயிரகணக்கானவர்கள் இவ்வாறு இருக்கிறார்கள். இந்து ஒற்றுமை பற்றி பேசும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இது குறித்து பேசுவது கிடையாது. அவர்களுக்க சொந்த மக்களையே பிடிக்கவில்லை. பின்னர் எப்படி மற்றவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவார்கள்’’ என்றார்.

இதற்கு முன்பு இவர் ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் அமைப்புகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார். சமீபத்தில் இவர் கர்நாடகா மாநில சிவசேனா தலைவராக நியமனம் செய்யப்பட்டார். வரும் சட்டமன்ற தேர்தலில் சிவசேனா 50 தொகுதிகளில் போட்டியிட்டு பாஜக.வுக்கு பாடம் கற்பிக்கும் என்று சவால் விடுத்துள்ளார். இவரது கருத்துக்கு மாநில பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் பதில் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.