புதுடெல்லி: உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்கள், தங்கள் குழுவின் கூட்டத்தை வீடியோகான்ஃபரன்ஸ் மூலமாக நடத்துவதற்கு ராஜ்யசபா செயலகம் அனுமதி மறுத்துவிட்டது.
இத்தகவலை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, அந்த நிலைக்குழுவின் தலைவரும் காங்கிரஸைச் சேர்ந்தவருமான ஆனந்த் சர்மாவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் கூட்டம் ஜுன் 3ம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு மற்றும் அந்த சூழலை உள்துறை அமைச்சகம் கையாளும் விதம் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
“இது மிகவும் துரதிருஷ்டவசமானது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கூட்டம் நடத்துகிறார். ஆனால், அந்த உரிமை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடையாதா? எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஐடி சூப்பர் பவராக இருக்க வேண்டும்” என்றுள்ளார் ஆனந்த் ஷர்மா.
கொரோனா ஊரடங்கு நிர்வாகம் குறித்த கலந்துரையாடலை தவிர்ப்பதற்காகவே, இந்த அனுமதி மறுப்பு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.