சென்னை: மாநிலங்களவை தேர்தலில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு, திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் மொத்தம் 6 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்ததால், அவர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திமுக தரப்பில், வில்சன், சிவலிங்கம், சல்மா, கமல்ஹாசன் மற்றும் அதிமுக தரப்பில், இன்பதுரை, தனபால் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரி சிவசுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா, அதிமுக-வை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாகும் அந்த 6 இடங்களுக்கும் வரும் ஜுன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக தரப்பில் 2 பேர் என மொத்தம் 6 பேர் அறிவிக்கப்பட்டு, அவர்கள் வேட்புமனுக்களை தாகக்ல் செய்தனர். இதுமட்டுமின்றி, 7 சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளிப்பது கட்டாயமாகும். சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேருக்கும் யாரும் முன்மொழிவு கடிதம் தரவில்லை என்பதால் பரிசீலனையின் போது 7 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து தேர்தலில் போட்டியிட்ட, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, கமல்ஹாசன் , இன்பதுரை, தனபால் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நேற்று (ஜுன் 12) மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து திமுக, அதிமுக மற்றும் மநீம சார்பில் மனுதாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வெற்றி பெற்ற 6 பேருக்கும் அவர்களுக்கான சான்றிதழ்களை மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரி சிவசுப்பிரமணியம் வழங்கினார்.