சென்னை:
தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து தமிழக மக்களிடையே கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த ரத்தினவேல், மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லக்ஷ்மணன் மற்றும் திமுகவை சேர்ந்த கனிமொழி, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா ஆகிய 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் ஜூலை 24-ல் முடிவடைகிறது.
இதையடுத்து இந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. ஜூலை 18-ந்தேதி தேர்தல் நடைபெற்று அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், திமுக,. அதிமுக இரு கட்சிகளும் நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக கட்சிகளுக்கு தலா 3 எம்.பி.க்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ள நிலையில், நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலின்போது, கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி வேட்பாளர்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குமா அல்லது திமுக, அதிமுக மட்டுமே போட்டியிடுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
திமுக கூட்டணி சார்பில், கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு ஒரு இடம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், ஒரு இடத்தை வைகோவுக்கு ஒதுக்குவது உறுதி என்று தகவல்கள் கூறுகின்றன.
மற்ற இரு இடங்களுக்கு கடுமையான போட்டிகள் நிலவி வரும் நிலையில், திமுகவின் பிரதான வழக்கறிஞரும், கட்சி மட்டுமின்றி, கருணாநிதியின் நினைவிடம் தொடர்பான வழக்கிலும், திமுகவுக்கு ஆதரவாக வாதாடி, மெரினாவில் இடம் கிடைக்க காரணமான வழக்கறிஞர் வில்சனுக்கு ஒரு இடத்தை வழங்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு இடத்துக்கு, திமுகவின் தொமுசவை சேர்ந்த சண்முகம், என்.ஆர். இளங்கோ, ஈரோடு முத்துசாமி, கம்பம் செல்வேந்திரன் உள்பல பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக கட்சி சார்பில், கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஏற்கனவே உறுதி அளித்தபடி ஒரு இடம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மற்ற இரு இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே உள்ள மைத்ரேயன், மீண்டும் பதவி கேட்டு அடம்பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே வேளையில் ஓபிஎஸ்-சின் தீவிர ஆதரவாளரான கே.பி.முனுசாமி ஒருபுறமும், முன்னாள் எம்.பி.யான தம்பித்துரையும் தனக்கு சீட் வேண்டும் என்று மற்புறமும் குரல் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக யாருக்கு சீட் வழங்குவது என்பதில் அதிமுகதலைமையில் இழுபறி நீடித்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.