டெல்லி:  பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இன்று காலை சபை கூடியதும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து  எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின் 2வது அமர்வு இன்று முதல் சுமார் ஒரு மாதம் காலம் நடைபெற உள்ளது.  காலை நேரத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டமும், பிற்பகலில் மக்களவை கூட்டமும் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில், முக்கிய நிகழ்வாக பட்ஜெட் குறித்து விவாதிப்பதும், வரவு செலவுத் திட்டத்திற்கான கோரிக்கைகளைப் பற்றி விவாதித்து நிதி மசோதாவைப் நிறைவேற்றுவதாகும்.  இந்த நிலையில், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வு,  100நாட்களை கடந்த விவசாயிகள் போராட்டம் போன்றவையும்  கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,  தமிழகம் உள்பட  5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் மும்மரமாக தொடங்கியுள்ளதால், அதுவும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

மேலும்,  ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (திருத்தம்) மசோதா, நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி மசோதா, மின்சார (திருத்தம்) மசோதா, கிரிப்டோ நாணயம் மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயம் ஒழுங்குபடுத்தும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம்  1-ஆம் தேதி நிதிஅமைச்சர்  நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை (Budget 2021) மக்களவையில் தாக்கல் செய்துடன் முதல்கட்ட கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது,  வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி 4 நாட்கள் நடந்த தொடர் அமளியால் சபை முடங்கியது. முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதியும், மக்களவை 13-ஆம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் (Parliament) இன்று மீண்டும் கூடியுள்ளது. இன்று மாநிலங்களவை கூட்டத் தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மைப்பகுதிக்கு சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அமளி தொடர்ந்ததால், அவை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும்  அவை கூடியதும், மாநிலங்களை துணைத்தலைவர் சபையை நடத்தினார்.  மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவரும்,  மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினை குறித்து பேசினார்.

அப்போது,  பெட்ரால் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. சமையல் காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் நாடுமுழுவதும் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும்” எனக் கூறினார்.

இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரால், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கடும் அமளி நீடித்ததால் அவையை பிற்பகல் 1 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.