டில்லி
பாலகோட் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை நாளை வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத முகாம்களின் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் திவிரவாத முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் அரசு தரப்பில் இருந்து உறுதியான தகவல் அளிக்கப்படவில்லை.
வெளிநாட்டு ஊடகங்கள் தாக்குதல் நடந்த இடம் வெறும் காடு எனவும் இந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை எனவும் செய்திகள் வெளியிட்டன. இதை ஒட்டி எதிர்க்கட்சியினர் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து சரியான விவரங்கள் வெளியிட வேண்டும் என அரசை கேட்டு வந்தன. அரசு விவரங்களை தெரிவிக்காமல் அவ்வாறு கேட்பவர்களை பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என குற்றம் சாட்டியது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் நல திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார். அப்போது அவர், “பல எதிர்க்கட்சி தலைவர்கள் இந்திய விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்று அல்லது நாளை இந்த விவரங்கள் வெளியிடபடும். பாகிஸ்தானுக்கும் அதன் தலைவர்களின் இதயங்களுக்கும் உண்மையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை தெரியும்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எத்தனை பேர் எத்தனை பேர் என கேட்டு வருகிறது. இந்திய விமானப்படை ஒவ்வொரு பிணமாக ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி இவர்களுக்கு சொல்ல வேண்டுமா? தேசிய தொழில்நுட்ப ஆய்வுக் கழகம் பாலகோட் பகுதியில் 300 மொபைல்கள் இயங்கி வந்தன என்பதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளன. அந்த மொபைல்களை மரங்கள் உபயோகித்தனவா? எதிர்க்கட்சிகள் தேசிய தொழில் நுட்ப ஆய்வுக் கழகத்தின் மீதும் நம்பிக்கை இல்லாம்ல் உள்ளனரா?
எனது காங்கிரஸ் நண்பர்களுக்கு கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை சரியாக தெரிய வேண்டும் எனில் அவர்கள் பாகிஸ்தான் செல்லலாம். அங்கு சென்று ஒவ்வொரு பிணங்களாக எண்ணி தெரிந்துக் கொள்ளலாம். அல்லது அங்குள்ள மக்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்” என உரையாற்றி உள்ளார்.