டில்லி

விவசாயிகள் நிலை பயங்கரமாக உள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் பேசிய போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று மக்களவையில் ஜீரோ அவர் நேரத்தில் ராகுல் காந்தி நாட்டில் தற்போது விவசாயிகள் நிலை குறித்து பேசினார்.  தனது பேச்சில் அவர் கேரள மாநில விவசாயிகள் குறிப்பாக  அவர் தொகுதி வயநாடு விவசாயிகள் நிலை குறித்தும் அவர் மக்களவையில் பேசி உள்ளார்.

ராகுல் காந்தி, “நாட்டில் தற்போது விவசாயிகளின் நிலை பயங்கரமாக உள்ளது.  இந்த நிலை கேரளாவில் குறிப்பாக வயநாடு பகுதியில் மிகவும் மோசமாக உள்ளது.  நான் விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய்ந்து உடனடியாக  ஒரு முடிவு எடுக்க வேண்டும் என நான் பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.” என மக்களவையில் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அப்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறுக்கிட்டு, “விவசாயிகளின் நிலைக்கு கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் காரணம் ஆவார்கள்.   விவசாயிகள் தற்கொலை என்பது பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே நடந்துள்ளது.   மோடி அரசின் முயற்சியால் விவசாயிகள் வருமானம் 20-25% அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.