டெல்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இவர் இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் ஆணையராவார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமல் நடத்துவதற்கு வழிவகை செய்பவர். இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

தற்போது இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக சுஷீல் சந்திரா இருந்து வருகிறார். பின்னர் தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.  இவரது பதவிக்காலம் இந்த மாதம் 14ந்தேதியுடன் (மே 2022 ) முடிவடைகிறது.

இதையடுத்து புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமாரை குடியரசு தலைவர் நியமித்து உள்ளார். இவர் வரும் 15ந்தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்க உள்ளார்.

ராஜீவ் குமார் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 1ந்தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக சேர்ந்தார். தேர்தல் ஆணையத்தில் பொறுப்பேற்பதற்கு முன்பு, குமார் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்தார். அவர் ஏப்ரல் 2020 இல் PESB தலைவராக சேர்ந்தார்.

ராஜீவ் குமார் பீகார்/ஜார்கண்ட் கேடர் 1984 பேட்ச் இந்திய நிர்வாக சேவையின் அதிகாரி ஆவார், பிப்ரவரி 2020 இல் இந்திய நிர்வாக சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்.

ராஜீவ் குமார், இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் (RBI), SBI, NABARD இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அவர் பொருளாதார புலனாய்வு கவுன்சில் (EIC), நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் (FSDC) உறுப்பினராக இருந்துள்ளார்; வங்கி வாரிய பணியகத்தின் (BBB) உறுப்பினர் மற்றும் நிதித் துறை ஒழுங்குமுறை நியமனங்கள் தேடல் குழுவின் (FSRASC) உறுப்பினர் போன்ற பல வாரியங்களிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.