சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு,ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், சென்னை சிறையில் உள்ள கைதிகளான நளினி, முருகன், பேரறிவாளன், சான் உள்பட அனைவரையும் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யலாம் என்று தமிழக சிறைத்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இவர்கள், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, ஜெ.பிறந்தநாளின் போது, விடுதலையாக உள்ள மற்ற ஆயுள்தண்டனை கைதிகளுடன் விடுதலை செய்யப்படுவார்களா என கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு, சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், 1999-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் உட்பட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னாளில், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக அவர்கள் விடுதலையாவது தடையானது.
இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, அண்ணா பிறந்ததினம், காந்தி ஜெயந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாள்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய முதல்வர் எடப்பாடி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய சட்டம் – சிறைவிதிகளுக்கு உட்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் அதுகுறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் கைதிகளில், நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த பட்டியலில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களை பிப்ரவரி 24ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று விடுதலை செய்யப்பட வாயப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களை தமிழக அரசு விடுதலை செய்யுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.