ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில், இன்று தூத்துக்குடி வந்துள்ள ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையில் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 10.40 மணிக்கு தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்ட ரஜினியைப் பாதுகாப்புடன் அழைத்துவந்தனர்.
பின்னர் காரில் ஏறிய ரஜினி, ரசிகர்களைப் பார்த்து கைகளைக் காட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பிறகு 100 கார்கள் புடைசூழ அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டார். குறிப்பிட்ட தூரம் வந்தவுடன், 10 கார்களை மட்டுமே காவல்துறையினர் அனுமதித்தனர்.
துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட 48 பேரையும் மருத்துவமனையில் சந்தித்த ரஜினி, காயமடைந்தோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.
பிறகு அங்கிருந்து புறப்பட்ட ரஜினி, ஒரு தனியார் ரிசார்ட்டில் ஓய்வெடுக்கிறார்.