சிறப்புக்கட்டுரை:

ஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31 2017  ம் அன்று, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி யிடப்போவது உறுதி என அறிவித்துவிட்டார். ஆன்மீக அரசியலே  தனது கொள்கை என கூறிவருகிறார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ளவே ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆனால், வரலாற்றை சற்று பின்னோக்கித் திருப்பிப் பார்த்தால், எம்ஜிஆர் மறைந்த அந்த காலகட்டத்திலேயே ரஜினிக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு, வெளிவந்த ரஜினி திரைப்படங்களில் சமகால அரசியல் குறித்த வசனங்களை ரஜினி பேசியிருப்பார்.

1988 ம் ஆண்டு வெளிவந்த குரு சிஷ்யன் திரைப்படத்தில்,”நாற்காலிக்கு சண்டை போடும் நாமெல்லாம் பையத்தியம்தானாடா” என்கிற பாடல் வரும். அப்போது அதிமுக “ஜெ” அணி “ஜா” அணி என இரண்டாக பிரிந்து இருந்த காலகட்டம்.

அந்த சமயத்தில், சட்டசபையில் மைக்கை கொண்டு அடித்த சம்பவங்களெல்லாம் நடைபெற்றது. அந்த சம்பவத்தை குறிக்கும் விதமாக, “மைக்கைக் கொண்டு பேசுவது அந்த காலம் மைக்கை கொண்டு அடிக்கிறது இந்த காலம் ” என்று ரஜினி வசனம் பேசுவார்.

அது மட்டுமல்லாமல்,”குடும்ப அரசியல் செய்றீங்களா “என்று மனோரமாவைப் பார்த்து கேள்வி கேட்பார். நகைச்சுவை காட்சி போல் அமைந்தாலும் சமகால அரசியலை அந்த திரைப்படம் விமர்சிக்கிறது.

89 ல் வெளிவந்த ராஜாதி ராஜாவில் “கட்சியும் வேணா கொடியும் வேணா “என்று பாடல் வரிகள் வரும். இது போன்ற பாடல் வரிகள் படத்தில் திட்டமிட்டு எழுதப்பட்ட வரிகள். படத்தின் கதைக்கும் இது போன்ற வரிகளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது.

கொடி பறக்குது படத்தில் தொடங்கிய ஆன்மீக அரசியல்

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் குறித்து இப்போது பேச வில்லை.பாபா படத்திற்கு பிறகு பேசவில்லை. 88 ல் வெளி வந்த கொடி பறக்குது படத்திலேயே ரஜினிகாந்த் தன்னுடைய ஆன்மீக அரசியலை தெளிவாக கூறிவிட்டார்.

கொடி பறக்குது படத்தில் ,”கருப்பு என்பது இருட்டு .கருப்பு என்பது அஞ்ஞானம்.கருப்பு என்பது அஞ்ஞானி கள் உடுத்தும் உடை” என்று வசனம் பேசுவார்.மேலும், தனக்குப் பிடித்த வண்ணங்களாக மூன்று வண்ணங்களைக் குறிப்பிடுவார்.

 1 .காவி புனிதமான நிறம்

 2 .கதர் காந்திய அணிந்த நிறம்

3. காக்கி.

கருப்பு என்பது அஞ்ஞானிகள் உடுத்தும் உடை. காவி என்பது புனிதர்கள் உடுத்தும் உடை. என்று முப்பது வருடங்களுக்கு முன்னரே ரஜினி வசனம் பேசிவிட்டார். ஆகவே,எம்ஜிஆர் இறந்த அடுத்த ஆண்டே ரஜினி ஆன்மீக அரசியல் பேசிவிட்டார். அதற்குப் பிறகு,ஜெயலலிதா வலிமையான தலைமையாக உருவெடுத்தப் பிறகு, ரஜினி அரசியல் பேசவில்லை.

96 க்குப் பிறகு மீண்டும் அரசியல்

தனது வீட்டுத் தெருவில் தன்னை நடந்து போக வைத்துவிட்டார். தன்னை காத்திருக்கச் செய்துவிட்டார் போன்ற பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக ஜெயலலிதா மீது கோபமாக இருந்த  ரஜினி, 96 தேர்தலில் திமுக தமாக கூட்டணியை ஆதரித்தார்.

ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்சியாக இருந்த காங்கிரசே இரண்டாக பிரிந்து தமிழ்மாநில காங்கிரசு உருவானது. வளர்ப்பு மகன் திருமணம், ஊழல் குற்றச்சாட்டு என அதிமுகவிற்கு எதிரான மனநிலை தமிழகத்தில் நிலவியது. அந்த சூழல் தந்த துணிச்சலில் ரஜினி ஜெயலலிதாவை எதிர்த்தார்.

அப்போது தூர்தஷனிற்கு கொடுத்த பேட்டியில், தற்போது நடப்பது admk ஆட்சி அல்ல jdmk ஆட்சி என்று கடுமையான விமர்சனத்தை வைத்தார்.

இந்த நிலை யில்தான்  பத்திரிகையாளர் சோ வின் முயற்சியால் திமுக தமாக ரஜினி கூட்டணி அமைந்தது. அந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ரஜினி இந்த கூட்டணியை ஆதரித்ததுதான் இந்த வெற்றிக்கு காரணம் என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால்,அதற்கடுத்த 98 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ஆதரித்த திமுக தாமக கூட்டணி வெற்றிப் பெறவில்லை.

அதன் பிறகு, ரஜினி எந்த அரசியல் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இருப்பினும் தனது படங்களின் மூலம் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியே வந்தார். அதாவது மக்கள் ரஜினியை விரும்புவது போலவும்,இவர் ஒதுங்குவது போலவும் காட்சிகள் இருக்கும்.

பாபா அரசியல் வருகைக்கான அஸ்திவாரம்

2002 ல் வெளிவந்த பாபா திரைப்படத்தில் ரஜினி வெளிப்படையாக தனது அரசியல் ஆசையை  வெளிப்படுத்தி னார். ரஜினியை ,ஆன்மீகப் பணி செய்ய இமயம் அழைக்கிறது. மற்றொருபுறம், அரசியல் சீர்கேட்டை சரி செய்ய மக்கள் அழைக்கிறார்கள். ஆனால்,ரஜினியோ ஆன்மீகத்தை தேர்ந்தெடுக்கிறார். பிறகு வேறு வழியேயின்றி, காலத்தின் கட்டாயத்தை நிறைவேற்ற ,பாபா ஆசியுடன் ஆன்மீக அரசியல் செய்ய மக்களிடம் வருகிறார். இதுதான் பாபா படத்தின் கதை . நான் அரசியலுக்கு வருகிறேன் என்று  மக்களுக்கு  அறி்வித்த படம். ஆனால்,படம் யாரும் எதிர்பார்க்காத  அளவிற்கு  படுதோல்வி.

பாபாவும் பாமக எதிர்ப்பும்

பாபா திரைப்படத்திற்கு பாமக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது..படப்பெட்டியை  திரையரங்கிற்குள் செல்ல விடாமல் தடுத்த சம்பவம் வடதமிழகத்தில் பெரிய பிரச்சனையானது.

இதனால்,கோபமடைந்த ரஜினிகாந்த், 2004 நாடாளு மன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாமகவை தோற்கடிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்டார். அந்த ஆறு தொகுதிகளிலும் ஆறுபடையப்பன் துணையுடன் பாமகவைத் தோற்கடிப்போம் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

ஆனால்,பாமக அந்த ஆறு தொகுதிகளிலும் மகத்தான வெற்றிப் பெற்றது. ரஜினி ஆதரித்த அதிமுக பாஜக கூட்டணி அந்த ஆறு தொகுதிகளிலும் மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் தோல்வி கண்டது. அதற்குப் பிறகு ரஜினி மீண்டும்  தியானத்தில் மூழ்கிவிட்டார்.

2004 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு மதுரைக்கு வந்தார் பாமக நிறுவனர் இராமதாஸ் . அவரின் வாகனத்தை ரஜினி ரசிகர்கள் மறித்தனர். வாகனத்தில் இருந்து இறங்கிய பாமக தொண்டர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ‘தடியடி’ ஏற்பட்டது. அதில் ரஜினி ரசிகர்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரஜினி அப்போதும் அமைதியாக இருந்தது, ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.(குறிப்பாக மதுரை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் அயர்ச்சியை ஏற்படுத்தியது).

அடுத்த ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது .சந்திரமுகியில், அரசியல் பன்ச் வசனங்கள் எதுவும் இல்லை என்றாலும் “,உனக்காக ஏங்கும் எதிர்காலம்” என்கிற பாடல் வரிகள் வரும். அரசியல் ஏக்கம் ரஜினிக்கு இன்னும் இருக்கிறது என்பதை உணர்த்தும் வரிகள் அவை.

பாபா விற்கும் சந்திரமுகிக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஜினிக்கும் பாமகவிற்கும் இடையேயான பகை மறைந்து போனது. அன்புமணி ராமதாசு புகை பிடிக்ககூடாது, என்று ரஜினிக்கு கடிதம் எழுதினார். ரஜினியும் கேட்டுக் கொண்டார். சமீபத்தில் நடந்த ரசிகர் சந்திப்பில் கூட புகைப் பழக்கத்தை விட்டு விடுங்கள் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு நடைபெற்ற 2006 சட்டமன்றத் தேர்தல்,2009 நாடாளுமன்றத் தேர்தல், 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என அய்ந்து தேர்தல்களிலும் ரஜினி அரசியல் குறித்து வாய் திறக்கவே இல்லை. ஆனால்,ஊடகங்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் , ரஜினியின் ஆதரவு (rajini voice) யாருக்கு? என்று தலைப்பிட்டு செய்தியாக்கின.

2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிற்குத் தான் ரஜினி வாக்களித்தார் என்று ஊடகங்கள் ஊகமாகச் செய்தி வெளியிட்டன. ரஜினியும் வாக்களித்துவிட்டு, மாற்றம் வேண்டும் என்று பேட்டியளித்தது போன்ற விசயங்களை வைத்து, ரஜினி அதிமுகவிற்கு வாக்களித்துவிட்டார் என்று பேசப்பட்டது.

அப்போது கலைஞர் வசனம் எழுதிய பொன்னர் சங்கர் திரைப்படமாக வெளிவந்திருந்தது. அந்த படத்தின் ப்ரிவ்யு காட்சிக்கு வந்த ரஜினிகாந்திடம் ,”நீங்கள் அதிமுகவிற்கு வாக்களித்தீர்களாமே” என்று கேட்டதாகவும், ரஜினி சங்கடப்பட்டு பாதியில் சென்று விட்டதாகவும்,செய்திகள் வெளிவந்தன.

இந்த செய்திகளையெல்லாம் வைத்து, ரஜினி 2011 பொது தேர்தலில் அதிமுகவை ஆதரித்தார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால்,அவர் பிரச்சாரம் செய்யவுமில்லை. வாக்களித்தப் பின் அதிமுகவிற்குத்தான் வாக்களித்தேன் என்று வெளிப்படையாகச் சொல்லவுமில்லை.

2004 க்குப் பிறகு இப்போதுதான் ரஜினி வெளிப்படையாக அரசியல் பேசியிருக்கிறார். ஒரு படி மேலே சென்று அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தேர்தல் அரசியலில் ரஜினிக்கான வாய்ப்புகள்

திரையுலகில் ரஜினி சூப்பர் ஸ்டார் . மாற்று கருத்தே இல்லை .தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகர். ஆனால்,அரசியலில் அப்படியே பிரதிபலிக்குமா.?

எம்ஜிஆர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரவில்லை திமுக என்கிற அரசியல் கட்சியிலிருந்து புதிதாக கட்சி ஆரம்பித்தார். 20 வருட அரசியல் அனுபவம். சினிமா கவர்ச்சி இரண்டுமே எம்ஜிஆருக்கு கை கொடுத்தது. ஆனால்,ரஜினிக்கு கள அரசியல் அனுபவம் கிடையாது.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தவுடன்,அவருக்கு ஏற்கனவே 234 தொகுதிகளிலும் ஒன்றியம், ஊராட்சி, பேரூராட்சி, நகரம் என  அனைத்து மட்டங்களிலும் கிளை அமைப்புகள் ஆயத்தமாக இருந்தன. திமுகவில் இருந்த எம்ஜிஆர் பிரியர்கள், கருணாநிதி எதிர்ப்பாளர்கள், காங்கிரசு கட்சியிலுள்ள திமுக எதிர்ப்பாளர்கள் என மூன்று தரப்பினரும் எம்ஜிஆருக்கு வாக்காளர்களாக மாறினர்.

தற்போது ரஜினிக்கு, ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மட்டுமே, உத்தரவாதமான வாக்காளர்கள். ரஜினி ரசிகர் என்று பொதுவாக எடுத்துக் கொண்டால்,அவர்களில் பலர் பல கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அல்லது வாக்காளர்களாக இருக்கிறார்கள். அதிமுக வில் ஏற்பட்ட தேக்கநிலையை தனக்கு சாதகமாகும் என்று பார்த்தால் தினகரன் தலைமை அங்கு நம்பிக்கை பெறுகிறது. வலிமையான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் வாக்காளர்களும் இந்த நேரத்தில் மாறி வாக்களிக்க வாய்ப்பு குறைவு.

ரஜினியின் மிகப்பெரும்பலம் சாதி மதம் கடந்து அனைவரும் விரும்புகிற நட்சத்திரம் என்கிற அடையாளம். ஆனால்,பாபா முத்திரை, ஆன்மீக அரசியல் போன்ற குறியீடுகளை ரஜினி முன்னிறுத்துவதை அவருடைய கிறித்தவ, இசுலாமிய ரசிகர்கள் விரும்புவார்களா? என்கிற கேள்வியும் எழுகிறது.

இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம். யாருமே சரியில்லை என்று புலம்பி நோட்டாவிற்கு வாக்களிக்கும் மக்கள் சமீபமாக அதிகரித்துவருகிறார்கள். அவர்களில் கணிசமானோர் ரஜினிக்கு வாக்களிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வாக்குகளையும் கமல் தனியாக கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில், கமல் பிரிக்க வாய்ப்பிருக்கிறது.

சமீபத்தில் ஆங்கில ஊடகத்தில் நடத்தப்பட்ட தேர்தல் கணிப்பில் ரஜினிக்கு 16 விழுக்காடு வாக்குகளும், 33 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது? என்று தெரியவில்லை. ரஜினி தற்போதுதான் மாவட்ட ரீதியாக நிர்வாக பொறுப்புகளை நியமித்துக் கொண்டி ருக்கிறார். இன்னும் மூன்று வருடங்களில் தனது கட்சிக்கான கட்டமைப்பை வலுப்படுத்திவிடுவாரா.?

எம்ஜிஆர் 20 வருடங்கள் அதற்காக உழைத்து உருவாக்கிய  கட்டமைப்பை ரஜினி மூன்று வருடத்தில் கட்டி யெழுப்பி விடுவாரா? என்கிற கேள்வி எழுகிறது. வடதமிழகம் தென்தமிழகம்,கொங்கு மண்டலம், கடை மடைப் பகுதி என தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் voting pattern வேறுபடும்.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது தென் தமிழகம்தான் அவருக்கு கைகொடுத்தது. அண்ணா கட்சி ஆரம்பித்த போது, வட தமிழகமும்,கடைமடைப் பகுதியும்தான் அவருக்கு கை கொடுத்தது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது,வன்னியர்களும் ஆதிதிராவிடர்களும் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளில்தான் அதிக வாக்குகள் கிடைத்தது.

அரசியலில் யார் எதிரி?

ரஜினி இப்போது வரை, மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசமறுக்கிறார். எந்த கட்சியையும் விமர்சிக்க மறுக்கிறார். இது தமிழக அரசியலுக்கு மிகவும் புதிது. இன்னும் சொல்லப் போனால்,அரசியல் உலகத்திற்கு இது புதிது.

கருணாநிதி எதிர்ப்பை மூலதனமாக்கியே எம்ஜிஆர் வென்றார். அதை அப்படியே ஜெயலலிதாவும் பின்பற்றினார். இரு திராவிட கட்சிகள் எதிர்ப்பு மற்றும் சாதி சங்கங்கள் எதிர்ப்பு என்பதை மய்யப்படுத்தியே விஜயகாந்தின் பிரச்சாரம் இருந்தது. அந்த பிரச்சாரத்தின் விளைவாகவே வடதமிழகத்தில் ஒரு தொகுதி விஜயகாந்த் வென்றார்.

ஆனால். ரஜினிகாந்த் யாரையும் விமர்சிப்பதில்லை அதே சமயம் தனக்கென்றும் எந்த கொள்கையும் இல்லை என்று சொல்கிறார். இவருக்கு எந்த அடிப்படையில் 16 விழுக்காடு வரும். எந்த தர்க்கமும் இல்லாமல் , தமிழ கத்தைப் பற்றியே தெரியாமல் பொத்தாம் பொதுவாக எடுக்கப்பட்ட தேர்தல் கணிப்பாகவே இதைப் பார்க்க வேண்டும்.  அல்லது திட்டமிட்டு பெரிய அளவில் ரஜினிக்கு ஆதரவு அலை இருக்கிறது என்பதை உருவாக்கு வதற்காக இப்படியொரு கணிப்பை வெளியிட்டிருக்கலாம்.

இது போன்ற காரணிகளையெல்லாம் திறனாய்வு செய்யாமல், மக்களிடம் சென்று அரசியல் செய்யாமல், எளிதாக ரஜினி முதலமைச்சராக ஒரு வழி இருக்கிறது. பாபா படத்தைப் போல தியான நிலையில் அமர்ந்து பாபா முத்திரையை காண்பித்து கண்களை மூடி மந்திரம் சொல்லலாம்.

உடனே முதலமைச்சர் பதவி ரஜினிக்கு தேடி வரும்……!