நடிகர் ரஜினிகாந்த், கொஞ்சம் தாமதமாக 2014ம் வருடம்தான் ட்விட்டர் பக்கத்தைத் துவங்கினார். சுமார் 45 லட்சத்துக்கு மேற்பட்டோர் அவரை ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள்.
அவரது பதிவுகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தாலும், சுமார் நான்கு வருடங்களில் 116 ட்விட்டுகள்தான் பதிவிட்டிருக்கிறார்.
அவரோ, நரேந்திரமோடி, அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மான் என்று 24 பேர்களை மட்டும்தான் பின்தொடர்கிறார்.
இதுவரை அவரது பக்கத்தில், ரஜினிகாந்த் என்ற பெயருக்குக் கீழ், சூப்பர்ஸ்டார் என்ற வாசகம் இருக்கும். தற்போது அந்த வாசகம் நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஜினிகாந்த் வட்டாரத்தில், “எம்.ஜி.ஆரை ஃபாலோ செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளார். எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தபோது மக்கள் நடிகர் , புரட்சி நடிகர் என்றெல்லாம் பட்டம் இருந்தது. அரசியலுக்கு வந்தபிறகு புரட்சித்தலைவர் என்ற பட்டம் எம்.ஜி.ஆருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டது.
அதே போல திரைத்துறையில் மட்டும் இருந்தவரை சூப்பர் ஸ்டார் பட்டம் பொறுத்தமாக இருக்கும். அரசியலுக்கும் வந்த பிறகு அதற்கேற்ப (எம்.ஜி.ஆர். போல) ஒரு புதிய பட்டத்தை சூட்டிக்கொள்ள ரஜினி திட்டமிட்டுள்ளார்” என்று கூறப்படுகிறது.