சென்னை:

மிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரஜினி குறித்து அவரது ரசிகர்களால் திடீர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

எனினும், தற்போது வரை ரஜினி கட்சி தொடங்கவில்லை. ஆனால், வரூகிற நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்குகிறார் என்றும், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார் என்றும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னரும் இதே போன்று பல்வேறு வதந்திகள் வெளியாகினாலும், வழக்கம் போல் ரஜினியின் அரசியல் வருகை குறித்த தகவல்களால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

இந்த நிலையில், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்கள் அவரது அரசியல் வருகையை வரவேற்கும் விதமாக பல்வேறு போஸ்டர்களை ஓட்டிவருகின்றனர். அதன்படி பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் திராவிட கட்சிகள் வேண்டாம், ஆன்மீக அரசியலுக்கு தயாராகுங்கள் என மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், ரஜினி கூறிய ”அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை” என்ற வாசகத்துடன் வேலூரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாசகங்கள் மக்களுக்காக சொல்லப்பட்டதாக தெரியவில்லை, ரஜினிக்குச் சொன்னதுபோல் உள்ளதாக அரசியல் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர் அடிக்க வேண்டாம் என்றும், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தலைமை நிர்வாகி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலூர், மதுரை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.