சென்னை:

‘சிரிக்க விடலாமா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு, ரஜினி மீது என்ன கோபமோ,  தாக்கிவிட்டார் மனிதர்.

“ஹீரோவுக்கு பில்ட் அப் சீன் யோசிச்சே பல படைப்பாளிகள் காணாமல் போய்விட்டார்கள்… ஆனால், ஹீரோக்கள் 30 லிருந்து 100 கோடிகள் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்…. அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது ஆயிரம் ஆயிரத்து ஐநூறு என்று டிக்கெட் விலை வைக்கிறார்கள்… எப்படி அவனால் படம் பார்க்க முடியும்? ஆக, பெரிய நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்கே விசுவாசமாக இருக்கமாட்டேங்கிறார்கள்” என்று பெரிய நடிகர்களை.. குறிப்பாக ரஜினியை குறிவைத்து விமர்சித்தார்.

மேலும், பேசிய அவர், “பெரிய நடிகர்கள் நல்லா சம்பாதிச்சுட்டு ரிடையர்ட் ஆகும் போது முதலமைச்சர் கனவு வேற… எந்த பெரிய நடிகராவது அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் டிக்கெட் விற்கவேண்டும், என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்களா? தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இருக்க முடியாதவர்கள் எப்படி முதல்வராகி ஒட்டுமொத்த மக்களுக்கும் விசுவாசமாய் இருப்பார்கள்…

தியேட்டர் டிக்கெட் விலை அதிகம் என்பதால் தான் தமிழ் ராக்கர்ஸில் படத்தை விடுகிறான்… தமிழ் ராக்கர்ஸை பொதுமக்களும் கொண்டாடுகிறார்கள்.. ரசிகனுக்கும் திரையிடுவதற்குமான இடைவெளியை நாம் களையவேண்டும்… அதை விடுத்து, யார் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.

பிறகு விஷால் பக்கம் தனது கோபத்தைத் திருப்பியவர்,

“தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால். தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஷால் எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைக் காப்பாற்றப்போகிறார்? நல்லவேளை, இன்றைக்கு ஒருத்தர் முதல்வராகிவிட்டார், இல்லாவிட்டால் விஷால், கவர்னர்ட்ட போயி நான் முதல்வராகி தமிழ்நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாலும் சொல்வார்” என்று கிண்டலாக தனது பேச்சை முடித்தார்.