டெல்லி: முன்ஜாமின் வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம், இது அரசியல் வழக்கா  என்று தமிழ்நாடு காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கு தொடர்புடைய மற்ற 3 பேருக்கும் ஜாமின் வழங்கியது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி மோசடி செய்ததாக அவர் உள்பட உதவியாளர்கள் மூன்று பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த புகாரின் பேரில் கைது செய்யப்படலாம் என அஞ்சிய ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால், தலைமறைவான ராஜேந்திர பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந் தார். இந்த மனு இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜி, தமிழ்நாடு காவல்துறையினர் நேற்று கர்நாடகா மாநிலத்தில் கைது செய்து, அவரை இன்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரபாலாஜி நேற்று கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தெரிவித்க்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரரின் முன்ஜாமின் மனு தொடர்பாக  இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் அவரை கைது செய்ய என்ன அவசரம் என்று தமிழ்நாடு காவல்துறையை கடிந்து கொண்ட நீதிபதிகள்,  இது அரசியல் உள் நோக்கம் கொண்ட வழக்கா?  என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில், முன்ஜாமின் கோரியிருந்த  பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகிய  3 பேரை கைது செய்ய இடைக்கால தடை  விதிக்கப்படுவதாக அறிவித்து, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.