சென்னை

தமிழக பாஜக டலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ்மனுஷ் இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்.

எனவே இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு, சேலம் ஆட்சியர் கடிதம் அனுப்பினார். தமிழக அரசு இந்த கடிதத்தை பரிசீலித்து அண்ணாமலை மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.

நேற்று அண்ணா குறித்து தவறால்கப் பேசியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.ஆ ஆனால் தற்போது அதற்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தமிழக ஆளுநர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழக ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழக ஆளுநர் மாளிகை பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது”.

என்று கூறப்பட்டுள்ளது.