ஜோத்பூர்
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் லால் கர்க் என்பவர் போதை மருந்துக்கு பதில் தங்கத்தை கடத்தினால் ஜாமீன் கிடைக்கும் என கூறி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் தேவாசி என்னும் இனத்தவர் வசித்து வருகின்றனர். இவர்கள் மீது போதை மருந்து கடத்துவதாக அதிகம் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. போதை மருந்து கடத்திய குற்றத்தில் அதிகம் தண்டிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலவாசிகளில் தேவாசி இனத்தவர் அதிகம் உள்ளதாக சமீபத்தில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த அர்ஜுன் லால் கர்க் என்பவர் சமீபத்தில் தேவாசி இனத்தவரின் நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது அவர், “தேவாசி இனத்தவர்கள் மீது சட்டவிரோதக் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளன. போதை மருந்து கடத்தி சிறை சென்றவர்களில் அதிகம் பேர் தேவாசி இனத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
உங்களுக்கு சட்ட விரோத வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளீர்கள் என்றால் போதை மருந்து கடத்துவதை நிறுத்தி விட்டு தங்கத்தை கடத்துங்கள். போதை மருந்து கடத்தினால் ஜாமீன் கிடைக்காது. ஆனல் தங்கத்தை கடத்தினால் ஜாமீன் பெற முடியும். மேலும் போதை மருந்து கடத்துபவர் என்பதை தங்கம் கடத்துபவர் என்பதில் ஒரு தனிப் பெருமை உள்ளது” எனக் கூறி உள்ளார்.
இது வீடியோ பதிவாக்கப்பட்டு சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. சட்டத்தை காக்க வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றியதற்கு மாநிலம் எங்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.