ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் உள்ள பாஜக அரசு நிதிப் பற்றாக்குறையால்  விவசாயக்  கடன் தள்ளுபடி முகாம்களை தள்ளி வைத்துள்ளது.

ராஜஸ்தானை ஆளும்  பாஜக அரசு  இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.   ஆனால் விவசாயக் கடன் தள்ளுபடிக்காக ரூ. 8000 கோடி நிதி தேவைப்பட்டது.   ராஜஸ்தான் அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் அஜய்சிங் கிலக் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்

அந்த அறிவிப்பில், “நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி விவசாயிகளின் கடன் தொகையில் முதற்கட்டமாக ரூ.2000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.   அடுத்த கட்டமாக ரூ.5000 கோடி தள்ளுபடி செய்ய வங்கிகளில் இருந்து அரசு உறுதியுடன் கடன் பெற உள்ளது.   அதைக் கொண்டு மேலும் கடன் தள்ளுபடி நடத்தப்படும்” என அறிவித்தார்.

முதற்கட்ட கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும்  முகாம்கள் வரும் 31 ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்ப்பட்டிருந்தது.   அந்த முகாம்கள் தற்போது தேதி குறிப்பிடப் படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.   இது குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

கடன் தொகைக்கான நிதிநிலையை ஏற்பாடு செய்யாதது அரசின் கையாலாகத தனத்தைக் காட்டுவதாகவும் அரசு தற்போது திவாலாகும் நிலையில் உள்ளதால் வங்கிகள் அரசுக்கு கடன் தர தயங்குவதாகவும் காங்கிரஸ் கூறி உள்ளது.