ஜெய்பூர்
வீட்டு வசதி திட்டங்களுக்காக ஜெய்பூர் மேம்பாட்டு ஆணையம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் மண்ணில் தங்களது உடலை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அருகில் உள்ள நிண்டர் கிராமத்தில் ஜெய்பூர் மேம்பாட்டு ஆணையம் வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக ஆயிரத்து 350 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட பகுதியில் பெரும்பாலும் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றை கையகப்படுத்தி இத்திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
14வது நாள் போராட்டம் இன்று காந்தி ஜெயந்தி அன்று நடந்தது. அப்போது விவசாயிகள் தரையில் பள்ளம் தோண்டி அதில் தங்களது உடலை கழுத்து வரை புதைத்து போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் குடும்பத்தினரும் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து நிண்டர் பச்சவ் யுவா கிஸான் சங்கர்ஷ் சமீதி தலைவர் நாகேந்திர சிங் செகாவத் கூறுகையில், ‘‘நான் பள்ளத்தில் நின்று கொண்டு போராட்டம் நடத்தினேன். விவசாயிகளின் நிலத்தை பறித்துக் கொண்டால் எங்களின் நிலை இது தான் என்பதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் நடந்தது’’ என்றார்.
போராட்ட ஒருங்கிணைப்பாளர் கைலாஷ் போக்ரா கூறுகையில், ‘‘எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும்’’ என்றார்.