மும்பை
பிரதமர் மோடியை இன்னொரு ஹிட்லர் என மகாராஷ்டிரா நவ நிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறி உள்ளார்.
குடி பாட்வா என்பது மராட்டிய மக்களின் புது வருடம் ஆகும். நேற்று குடி பாட்வா மகாராஷ்டிர மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைநகர் மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இந்த வருடப் பிறப்பை ஒட்டி கொண்டாட்டங்ள் நடந்தன. குடி பாட்வா என்பது மராட்டியருக்கு மற்றும் கொங்கணியருக்கும் வருடப்பிறப்பாகும்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சமிதி கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே நேற்று மும்பை தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பார்க்கில் ஒரு கூட்டம் நடத்தினார். அப்போது ராஜ் தாக்கரே, “தற்போது நமது நாட்டுக்கு இரு பெரும் அபாயங்கள் உள்ளது. ஒன்று அமித்ஷாவும் மற்றது பிரதமர் மோடியும் ஆகும். நமது பிரதமருக்கு வாய் சவடால் தான் பெரியதாக உள்ளது. காரியத்தில் ஒன்றும் இல்லை. இண்டர்நெட்டில் மிகப் பெரிய வாய் சவடால் யார் என தேடினால் மோடியின் பெயர் வருகிறது.
தனது நாட்டு மக்களிடமே ஏன் மோடி பொய் சொல்லி வருகிறார். அமெரிக்கா தாங்கள் பாகிஸ்தானுக்கு அளித்த அட்தனி போர் விமானங்களும் பத்திரமாக உள்ளதாக கூறி விட்டது. ஆனால் மோடி ஏன் இத்தனை பொய்களை கூறுகிறார்? கடந்த ஐந்து வருடங்களாக மீடியாவிடம் ஒரு கேள்வியாவது மோடி பெற்றுள்ளாரா? அவர் அதற்கு ஏன் பயப்படுகிறார்?
புல்வாமா தாக்குதல் எவ்வாறு நடந்தது? அத்தனை ஆர்டிஎக்ஸ் எங்கிருந்து வந்தது? எல்லைப்புறம் ராணுவத்தால் பாதுகாக்கப்படும் போது அத்தனை வெடிகுண்டுகள் இந்தியாவுக்குள் எப்படி வந்தன என நான் மோடியை கேட்கிறேன். அமித்ஷா 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறுகிறார். அவர் துணை விமான ஓட்டியா? இந்திய விமானப்படை தங்களிடம் இறந்தவர்கள் எண்ணிக்கை இல்லை எனும் போது பாஜகவிடம் அது எப்படி கிடைத்தது?
மோடி பிரதமராகும் முன்பு எதிர்த்த ஜிஎஸ்டி போன்றவற்றை அவர் பிரதமரானதும் அமுல் படுத்தி உள்ளார். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பால் 4.5 கோடி மக்கள் பணி இழந்தனர். அதனால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் மோடி ஜிஎஸ்டி பற்றியோ பணமதிப்பிழப்பு பற்றியோ வாய் திறப்பதில்லை. அதற்கு பதிலாக இந்துக்கள் என்னும் ஆயுதத்தை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் முதல் டிஜிடல் சிற்றூர் தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை பாருங்கள். நமது கட்சியின் செய்தி தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே அங்கு சென்று பார்த்துள்ளார். அந்த சிற்றூர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் தத்து எடுக்கபட்டுள்ளது. அங்கு தற்போது இண்டர்நெட் வசதி முழுவதுமாக இல்லை. மக்களிடம் ஏடிஎம் கார்டும் கிடையாது. ஏடிஎம் கார்ட் தேய்க்கும் இயந்திரமும் கிடையாது.
மொத்தத்தில் பிரதமர் மோடி மற்றொரு ஹிட்லராக சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். மோடிக்கே வாய்ப்பளித்த நாம் ராகுல் காந்திக்கு தற்போது வாய்ப்பளிக்க வேண்டும். இந்த மராட்டி வருடப் பிறப்பான குடி பாட்வா நன்னாளில் மக்களுக்கு விரைவில் மோடி இல்ல்லாத வருடம் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்” என உரையாற்றினார்.