மும்பை
பிரதமர் மோடி இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை அகமதாபாத் மட்டும் அழைத்து செல்வதற்கு ராஜ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா நிர்வாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே. இவர் நேற்று மும்பை சிவாஜி பூங்காவில் ஒரு மாபெரும் பேரணியில் கலந்துக் கொண்டு தனது கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார். இந்த உரையின் போது மோடியையும் அவருடைய மத்திய அரசையும் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.
ராஜ் தாக்கரே தனது உரையில், “நான் பேசினால் என்னை குறுகிய மனப்பான்மை உடையவன் என குற்றம் சாட்டுகின்றனர். ஏனென்றால் நான் எனது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மராட்டிய மக்களைப் பற்றி பேசுவதால் நான் குறுகிய மனப்பான்மை உடையவனாம். அப்படியானால் பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு தலைவர்களை அகமதாபாத் நகருக்கு மட்டும் அழைத்துச் செல்கிறார்?
இந்தியாவில் அகமதாபாத் நகர் மட்டுமே உள்ளதா? அவர் ஏன் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, புனே போன்ற நகர்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாதா? அவ்வளவு ஏன் மும்பை சிறிய நகரமா? பிரதமர் ஆகியும் கூட மோடி தன்னை இன்னும் தனது மாநில முதல்வராகவே கருதுகிறார். அவர் இந்த நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் என்பதை புரிந்துக் கொள்ளவில்லை.
குஜராத் மாநிலத்துக்கு புல்லட் ரெயில் அறிமுகம் செய்துள்ளார். மும்பையில் இருந்து குஜராத் செல்லும் ரெயில்களில் 45% காலியாக செல்கின்றன. இந்நிலையில் இவ்வளவு செலவில் அமைக்கப்படும் புல்லட் ரெயிலில் யார் பயணம் செய்யப் போகிறார்கள்? குஜராத் மக்களே புல்லட் ரெயிலை விரும்பவில்லை.” என பேசி உள்ளார்.