பெங்களூரு :
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறகோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரில் இன்று நடந்த பேரணியில், பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொள்ள, கர்நாடக மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த விவசாயிகளை நகருக்குள் நுழைய விடாமல் பல்வேறு இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீசாரின் கெடுபிடிகளையும் மீறி, பெங்களூரு நகரில் நடந்த பேரணிக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தலைமையேற்று நடத்தினார்.
முன்னதாக, நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்று, கலபுர்கி மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தென்னிந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தெரிவித்த நிலையில், இன்று நடந்த மாபெரும் பேரணி, மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரணியில் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேளாண் சட்டங்களை நீக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார்.