சென்னையில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தமிழகத்தின்  உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக குளச்சலில் இருந்து கீழக்கரையை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 3 மீட்டருக்கும் மேலாக அலைகள் உயரும் என்றும் நாளை இரவு வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இதனால், தென் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச் செல்லுமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் குளச்சல், தக்கலை ஆகிய இடங்களில் 7 சென்டிமீட்டரும், காஞ்சிபுரத்தில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. ஓமலூர், ஆலங்காயம், போளூர் ஆகிய இடங்களில் 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு, சூளைமேடு, கேகேநகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

கடந்த ஓரிரு மாதங்களாக அனல் வெப்பத்தை அனுபவித்து வந்த சென்னையில் தற்போது குளிர் காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

[youtube-feed feed=1]