சென்னை:
சென்னையில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது.
தொடர் கனமழையை அடுத்து, இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் சென்று ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது எழும்பூரில் மழை தேங்கி நிற்கும் பகுதிகளில் நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால் காவல் ஆணையர் அலுவலகம் அருகே ஈ.வெ.ரா.பெரியார் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக தி.நிகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் மின்வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.