டில்லி:

பாதுகாப்பான ரெயில் பயணத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டிருப்பதாக ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘தற்போதைய ரெயில்வேயின் அவசர தேவை பாதுகாப்பு தான். கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரோ தலைவர் கிரண் குமாருடன் நடந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதம் எனது கண்களை திறக்கும் வகையில் அமைந்திருந்தது.

இஸ்ரோவின் தொழில்நுட்பம் ரெயில்வேயின் பாதுகாப்பு அம்சங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில்வேயில் கடந்த 1960ம் ஆண்டில் சிறிய அளவில் கம்ப்யூட்டர் பயன்பாடு கொண்டுவரப்பட்டது. இந்த வகையில் பாதுகாப்பு அம்சங்களில் கம்ப்யூட்டரின் பயன்பாட்டை விஸ்தரிக்க முடிவு செய்யப்பபட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கல்வி ஆகியவை உலகத்தை மாற்றி அமைத்துள்ளது. அறிவியலில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களை இந்தியா இணைத்துக் கொள்ள வேண்டும். ஆயிரகணக்கான ரெயில் நிலையங்களை வைபை மூலம் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெயில்நிலையங்களை சுற்றியுள்ள கிராமங்களில் வைபை வசதி ஏற்படுத்த முடியும். இதனால் கிராமப் புற இந்தியாவும் புதிய தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும்’’ என்றார்.

ரெயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபு பதவி வகித்த காலத்தில் பல ரெயில்கள் தடம் புரண்ட சம்பங்கள் நடந்தது. குறிப்பாக கடந்த மாதம் 19ம் தேதி முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோல் அடுத்த ஒரு வாரத்தில் டில்லி&அழ்மார்க் கைஃபியாத் எக்ஸ்பிரஸ் ஆவுரையா மாவட்டத்தில் தடம் புரண்டதில் 100 பயணிகள் காயமடைந்தனர். இது போல் இதர ரெயில் தடம் புரண்ட சம்பங்களில் பலர் காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பலி தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.