சென்னை: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை.  இந்த வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து  அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மே 10ந்தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளது.

திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ரயில்களை ரயில்வே அறிவித்துள்ளது; அத்துடன், தற்போது இயங்கிவரும் ரயில் சேவைகளிலும் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும், மே 20-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன

இந்த  ரயில் சேவையானது சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவையாகும்.   விழுப்புரம், கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால், நாகூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் வழித்தடத்தில் மும்மதங்களின் வழிபாட்டு தலங்களையும் இணைக்கும்  வகையில் அமைந்துள்ளது.

நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கும், வேளாங்கண்ணிக்கும் இடையே ஒரு முழுமையான ரயில் சேவையாக இது இயக்கப்பட உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வருகை தருகின்றனர். விசேஷ நாட்களில் வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

உலகப் புகழ் பெற்ற ஆன்மீகத் திருத்தலமாக திகழும் வேளாங்கண்ணிக்கும், சென்னைக்கும் இடையே நேரடியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முதல் முறையாக தொடங்கப்பட இருக்கிறது.

இந்த ரயிலின் மூலம் ஆன்மீகத் திருத்தலங்களான திருநள்ளாறு, நாகூர் மற்றும் வேளாங்கண்ணி என மூன்று மதங்களைச் சேர்ந்த முக்கிய வழிபாட்டுத் தலங்கள் இணைக்கப்படுவது சிறப்புக்குரிய விஷயமாகும்.

தற்போது தாம்பரம் மற்றும் காரைக்கால் இடையே திருவாரூர் வழியாக இயக்கப்பட்டு வரும் 23 பெட்டிகளை கொண்ட எக்ஸ்பிரஸ் ரயிலானது இனி பேரளம் (திருவாரூர் மாவட்டம்) – காரைக்கால் இடையிலான புதிய ரயில் பாதை வழியாக திருப்பப்பட்டு, வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட உள்ளது.

இந்த புதிய வழித்தடத்தில் ரயில் சேவை மாற்றப்படுவதன் மூலம் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் ரயில் இஞ்சினை திசை திருப்ப வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் இதன் மூலம் பயண நேரம் சுமார் 30 நிமிடங்கள் வரை குறையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த புதிய ரயிலானது தாம்பரத்திலிருந்து தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதேபோல மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முழுமையான நேரடி ரயில் சேவை வரும் மே மாதம் 20ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. மூன்று மதங்களையும் சேர்ந்த பக்தர்களுக்கு பெரும் வசதியாக அமைய உள்ள, இந்த ரயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 20ஆம் தேதி முதல் இரு மார்க்கங்களிலும் தினசரி ரயில் சேவையாக இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு வேளாங்கண்ணிக்கு செல்லும் பயணிகள் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அதிகாலை 3.40 மணிக்கு இறங்கி, அங்கிருந்து மின்சார ரயில்கள் அல்லது பேருந்துகள் மூலம் வேளாங்கண்ணிக்கு செல்ல வேண்டிய சிரமம் இருந்தது. இந்த புதிய ரயில் சேவையால் பக்தர்களின் சிரமம் தவிர்க்கப்பட உள்ளது.

 

[youtube-feed feed=1]