கான்பூர்

கான்பூர் அருகே நேற்று சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில்வே அமைச்சர் சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் குஜராத் மாநிலம் அகமதாபாத் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி இடையே இயக்கப்பட்டு வருகிறது. நேற்று சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி புறப்பட்டு இன்று அதிகாலை 2.30 மணியளவில் உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே கோவிந்த்புரி பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

விபத்தில் ரயிலின் 20 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  சபர்மதி ரெயில் விபத்து சதி வேலையா? என சந்தேகம் எழுந்துள்ளது.  முதற்கட்ட தகவலில் தண்டவாளத்தில் வைக்கப்பட மர்ம பொருள் மீது ரெயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் எக்ஸ் தளத்தில்,

”வாரணாசி அகமதாபாத் இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மர்ம பொருள் மீது மோதி தடம்புரண்டது. இச்சம்பவம் கான்பூர் அருகே அதிகாலை 2.35 மணிக்கு நடைபெற்றுள்ளது. ரெயில் மோதிய பொருள் தொடர்பான அடையாளங்கள் காணப்படுகின்றன.

இந்த விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என உத்தரபிரதேச காவல்துறையினர், உளவுத்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை’”

எனத் தெரிவித்துள்ளார்.

எனவே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதற்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.