கொல்கத்தா: ரயில் தாமதம் குறித்து விசாரணை நடத்த முயன்றதற்காக குற்றம் சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ரயில்வே நீதிபதி ஒருவர், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தால் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி கொல்கத்தாவின் லேக் கார்டன் ரயில் நிலையத்தில், சீல்டா செல்லும் லோக்கல் ரயிலைப் பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார் நீதிபதி மின்ட்டு மாலிக். ஆனால், ரயில் உரிய நேரத்திற்கு வந்துசேரவில்லை.
ஆனால், இந்த தாமதம் குறித்து பயணிகள் பலரிடமும் பேசினார். கடத்தல்காரர்களுடன் ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகள் சட்டவிரோதமாக தொடர்பு வைத்துக்கொண்டு, ரயிலை சில இடங்களில் சட்டவிரோதமாக நிறுத்தி, தடைசெய்யப்பட்ட சரக்குகளை ஏற்றிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்தார்.
எனவே, ரயில் வந்து சேர்ந்ததும், மோட்டார்மேன் அறைக்குச் சென்று இதுதொடர்பாக விசாரித்தார். ஒரு நீதிபதி மோட்டார்மேன் அறைக்கு அனுமதியின்றி செல்வது குற்றம். அப்படி தெரிந்தும், கடத்தல் நெட்வொர்க்கை உடைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அதை செய்தார். மோட்டார்மேன் மற்றும் கார்டு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் வாய்மொழியாக உத்தரவிட்டார்.
காவல்துறையினர் அந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று விட்டனர். இந்தப் பிரச்சினை ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரிதாக வெடித்தது. அதிகார வரம்பை மீறி நீதிபதி நடந்துகொள்வதாக ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே, இதுதொடர்பாக நடந்த விசாரணையில், நீதிபதி மாலிக் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், முறையீட்டு வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மாலிக்கின் செயல் வரம்பை மீறியதுதான் என்றாலும், அவரின் நோக்கம் பாராட்டத்தக்கது என்று கூறி, அவரை மீண்டும் பணியமர்த்தும்படி உத்தரவிட்டது.