சென்னை:
த்தம் விஸ்வநாதன் வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் 300 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
1nathasmv
கடந்த 12ந்தேதி தமிழகத்தை பரபரப்பாக்கிய செய்தி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு, மேயர் சைதை துரைசாமி வீடு உள்பட 45 இடங்களில் ஒரே நாளில் ரெய்டு நடைபெற்றது.
இதையடுத்து கட்சி பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதனை நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
தமிழக மக்கள் அனைவரும் உற்று நோக்கிய இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள், பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்கள் நடத்திய சோதனையில், 300 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
நடந்து முடிந்த  சட்டசபை தேர்தலின் போது, கரூரில்  அன்புநாதன் என்ற தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர்  சோதனை நடத்தினர்.  அந்த ரெய்டில் 4.70 கோடி ரூபாய் சிக்கியது.
அப்போதே எதிர்க்கட்சிகள் இந்த பணம் ஆளும் கட்சி முக்கிய பிரமுகருக்கு உரியது என விமர்சனம் செய்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த பணம் பற்றிய நெட்வொர்க் தெரிய வந்தது.
தொழிலதிபரான அன்புநாதனுக்கும், நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத்,  சென்னை மேயர் சைதை துரைசாமி, அவரது மகன் வெற்றி ஆகியோருக்கும் இந்த பண விவகாரம் பற்றிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வருமான வரித்துறையினர்  ஆதாரங்களை சேகரிக்க தொடங்கினர். அதையடுத்து திண்டுக்கல் மாவட்டம், வேம்பார் பட்டியில் உள்ள விஸ்வநாதன் வீடு, சென்னையில் உள்ள அவரது வீடு, நண்பர்களின் வீடுகள் மற்றும் சைதை துரைசாமியின் ராஜகீழ்ப்பாக்கம் பண்ணை வீடு, சென்னை வீடு என, எட்டு இடங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி திடீர் சோதனை நடத்தினர்.
ஐந்து நாட்கள் நடைபெற்ற சோதனை குறித்து வருமான வரித்துறையினர் கூறியதாக வெளிவந்துள்ள தகவல்கள்:
சென்னையில் உள்ள நத்தம் விஸ்வநாதன் கூட்டாளி வீட்டில், 25 லட்சம் ரூபாய் சிக்கியதாகவும், மேலும் எந்த வித பணமும் கிடைக்கவில்லை என்றும்  ஏராளமான இடங்களில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், குறைந்தது 300 கோடி ரூபாய் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகிறது.
மேலும் சைதைதுரைசாமியின் மகன் வெற்றி வீட்டில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்றாலும், அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணத்திற்கும், அவருக்கும் உள்ள தொடர்பு உறுதியாகி உள்ளது; அதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும்  தெரிவித்தனர்.
மின்துறை அமைச்சராக இருந்தபோது, ஏராளமான பணம்  சுருட்டியிருப்பதும்,எங்கு முதலீடு செய்திருக்கிறார் என்பதும் தெரிந்துவிட்டதாகவும், நத்தமுக்கு அன்னிய தொடர்புகள் இருப்பதும், வெளிநாடுகளில் தீவு வாங்கி உள்ளதாகவும்  கூறப்படுகிறது; ஆனால்  அது தொடர்பான ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை  தொடர்ந்து நத்தம் கைது செய்யப்பட்டார் என தகவல்கள் பரவியது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து, நத்தம் விஸ்வநாதனே, ” நான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை’ விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
 
 
நத்தம் சீக்கிரமே கைது செய்யப்படலாம் என வருமான வரித்துறை அலுவலகம் கூறியுள்ளது.