அகமதாபாத்
நித்தியானந்தாவின் குஜராத் மாநிலக் கிளையில் நடந்த சோதனையை அடுத்து இரு பெண் மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தின் கிளை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த அகமதாபாத் ஆசிரமத்திலிருந்து மகளை மீட்டுத் தரக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.. அவர்கள் தங்கள் மனுவில், “பெங்களூரு அருகே பிடதி ஆசிரமம் நடத்திவந்த கல்வி நிலையத்தில் 2013-ல் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட எங்களுடைய 4 மகள்களைச் சேர்த்தோம். அதற்குப் பிறகு அவர்கள் அகமதாபாத்தில் உள்ள மற்றொரு ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதாக அறிந்தோம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் அந்த ஆசிரமம் இயங்கிவருகிறது. நாங்கள் அங்கு சென்று எங்கள் மகள்களைச் சந்திக்க முயன்றோம். எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காவல்துறையினர் உதவியோடு ஆசிரமத்துக்குள் சென்று எங்கள் இரு மகள்களை மீட்டோம். அந்தப் பெண்கள் இருவரும் மைனர்கள் ஆவார்கள்.
அதே வேளையில் எங்களின் மற்ற மகள்களான லோபாமுத்ரா ஜனார்த்தன ஷர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகியோரை எங்களால் சந்திக்க முடியவில்லை. அவர்கள் எங்கள் மகள்களைக் கடத்தி சட்டவிரோதமாக இரண்டு வாரங்களுக்கு மேலாக அடைத்து வைத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டு குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இந்த மனுவின் அடிப்படையில் நித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் குஜராத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆசிரமத்தில் சோதனை நடத்திய காவல் அதிகாரிகள் அதற்குப் பின் நேற்று இரண்டு பெண் நிர்வாகிகளைக் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது குறித்துப் பேசிய அகமதாபாத் டிஎஸ்பி கமாரியா, “மனுவில் குறிப்பிடப்பட்ட இரு பெண்களும் ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டதும் துன்புறுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் காவலில் உள்ளனர். நாங்கள் எங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.