டில்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை  தொடங்குகிறார்.

மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பாராளுமன்ற கூட்டத் தொடரும், பாராளுமன்றத்தின் 16வது கூட்டத்தொடரும் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து , பாராளுமன்ற 17வது மக்களவையை உருவாக்கும் வகையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. பாஜகவை எதிர்த்து அகில இந்திய காங்கிரசில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் என இளந்தலைவர்கள் களமிறங்கி உள்ளனர்.

காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மெகா கூட்டணி அமைத்து பாஜகவை விரட்டியடிக்க களம் அமைத்து வருகிறது.  இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் தனது முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

குஜராத்தில் உள்ள வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றுகிறார்.

அகில இந்திய காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்னர் ராகுல்காந்தி  முதல்முறையாக குஜராத்துக்கு வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில காங்கிரசார் எடுத்துவருகின்றனர்.