டெல்லி: கச்சா எண்ணெய் விலை குறையும்போது நீங்கள் ஏன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 7ம் தேதியிலிருந்து 22வது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 பைசாவும், டீசலுக்கு 13 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 22 நாட்களாக விலை உயர்ந்து வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கச்சா எண்ணெய் விலை குறையும்போது நீங்கள் ஏன் விலையை உயர்த்துகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு உயர்த்தப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறையும்போது நீங்கள் ஏன் விலையை உயர்த்துகிறீர்கள்? எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.