பெங்களூரு
காங்கிரஸ் கட்சியின் எண்ணம் ஏழை மக்களின் நலன் மட்டுமே என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
இன்று கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
விழாவில் முதல்வர் சித்தராமையா , துணை முதல்வர் டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்றுள்ளனர் . இத்திட்டத்தின் கீழ் 1.20 கோடி பெண்கள் பயனடைய உள்ளனர். கர்நாடக அரசு இத்திட்டத்திற்காக ரூ.17,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் ராகுல் காந்தி
”நாங்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஒரு போதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். நாங்கள் கர்நாடகத்தில் செய்த பணிகள் இந்தியா முழுவதும் பிரதிபலிக்கப்படும்.
எங்கள் காங்கிரசின் உத்தரவாதங்கள் வெறும் திட்டங்கள் அல்ல, மாறாக அவை ஒரு ஆட்சி ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு ஏழை மக்களின் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்பதே எண்ணம்.
நாங்கள் தேர்தலுக்கு முன் அளித்த 5 வாக்குறுதிகளில் மூன்று வாக்குறுதிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு நான்காவது வாக்குறுதி செயல்படுத்தப்பட்டுள்ளது.”
என்று கூறினார்.