டெல்லி

பாஜக சீக்கியர்கள் குறித்து தாம் தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அ அமெரிக்கா சென்றபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உரையாடல் ஒன்றை நடத்தினார். \

அப்போது ராகுல் காந்தி ,

“இந்தியாவில் இருக்கக் கூடிய ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? அதேபோல் காடா அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? என்பது இந்தியாவில் கேள்வியாக இருக்கிறது”

எனத் தெரிவித்தார்.

இதையொட்டி ராகுல்காந்தி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சீக்கிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்தியாவில் சீக்கியர்களுக்கு மதச்சுதந்திரம் இல்லை என்பதை போன்ற தோற்றத்தை அந்நிய மண்ணில் ராகுல்காந்தி ஏற்படுத்த முயன்றுள்ளார் என கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். சில பாஜக அமைச்சர்கள் ராகுல் காந்தியை பயங்கரவாதி என்று விமர்சித்தும் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர்.

ராகுல் காந்தி இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,

“அமெரிக்காவில் நான் பேசிய கருத்து குறித்து பாஜகவினர் பொய்களைப் பரப்பி வருகின்றனர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதரர்களையும் பார்த்துக் கேட்கிறேன், நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?

ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியனும் அச்சமின்றி தங்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது.

வழக்கமாக பாஜக பொய்களை மட்டுமே கையாளுகிறது. உண்மையை சகித்துக் கொள்ள முடியாததால் என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது.

ஆனால் இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்பொழுதும் குரல் கொடுப்பேன். வேற்றுமை, சமத்துவம், அன்பு என்பதுதான் நமது ஒற்றுமை”

என்று பதிவிட்டுள்ளார்.