மீரட்:

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது,காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்த உ.பி. வந்த, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறை யினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

 

உ.பி. மாநில காவல்துறையினரின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.  பாஜக ஆட்சி செய்து வரும்  உத்திர பிரதேசத்தில் தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி கலவரங்களாகி மாறி வருகின்றன. இதனால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை ஒடுக்கி வருகின்றனர்.

உத்திர பிரதேசத்தில் இதுவரை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும்,  சுமார் 705 பேர்  கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த  நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீரட் நகரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல், உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி ஆகியோர் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுடன்  சென்றனர்.

அவர்கள் சென்ற வாகனத்தை உ.பி. மாநில அரசு காவல்துறை தடுத்து நிறுத்தியது. அவர்களை  உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்.

காவல்துறையினரின் இந்த அடாவடி செயலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.