டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ராகுல்காந்தி என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டார் என பழங்குடியின பெண் எம்.பி. புகார் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகளின் பெண் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுகுறித்து இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அம்பேர்கர் படத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று (டிசம்பர் 19) அன்று இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நீல நிற உடை அணிந்து, ‘‘உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்’’ என கோஷமிட்டபடி அம்பேத்கர் சிலையில் இருந்து, நாடாளுமன்ற நுழைவுவாயில் நோக்கி பேரணி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி மற்றும் தமிழக எம்.பி. உள்பட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு போட்டியாக, பாஜக எம்.பி.க்களும் நாடாளுமன்ற நுழைவுவாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்றனர். இதனால், இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாடாளு மன்றத்துக்குள் நுழைய முயன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்.பி.க்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒருவரை பிடித்து ஒருவர் தள்ளிபோது, அந்த பகுதியில் உள்ள படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி (69), உத்தரபிரதேச பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத் ஆகியோர் கீழே விழுந்தனர். இதில், சாரங்கியின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தனம் கொட்டியது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதை ராகுல் காந்தி பார்த்துவிட்டு திரும்பி சென்றார். தான் கீழே விழ ராகுல்காந்திதான்காரணம் என சாரங்கி குற்றம்சாட்டினார். அதுபோல, கீழே விழுந்த மற்றொரு எம்.பி. முகேஷ் ராஜ்புத்துக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இருவருக்கும் தலையில் சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பாஜக எம்பிக்கள் தள்ளிவிட்டதாகவும், ராகுல் காந்தியை வழிமறித்து மிரட்டல் விடுத்ததாகவும் காங்கிரஸ் தரப்பில் மக்களவை தலைவரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற வாயிலில் இந்த தள்ளுமுள்ளு நடைபெற்றபோது, அங்கு கோஷமிட்டுக்கொண்டு இருந்த ராகுல்காந்தி தன்னை ஒட்டி உரசிக்கொண்டு தரக்குறைவாக நடந்துகொண்டார் பாஜகவைச் சேர்ந்த பழங்குடியின எம்.பி. புகார் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக, நாகாலாந்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஃபங்க்னான் கொன்யாக் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாடாளுமன்ற நுழைவு வாயிலில் படிக்கட்டுக்கு கீழே வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என்னை நோக்கி மிக நெருக்கமாக வந்து உரக்க கோஷமிட ஆரம்பித்தார்.
“நான் நாகாலாந்தின் ST சமூகத்தைச் சேர்ந்தவள், நான் ஒரு பெண் உறுப்பினர். எனது கண்ணியம் மற்றும் சுயமரியாதையை ராகுல் கடுமையாக காயப்படுத்தியுள்ளார். அவரின் இந்த செயல் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண் உறுப்பினராக இருந்த நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நான் கனத்த இதயத்துடன் ஒதுங்கிவிட்டேன், ” எனது கண்ணியம் மற்றும் சுயமரியாதையை ராகுல் ஆழமாக காயப்படுத்தியுள்ளார். இதனால், நான் மனமுடைந்துவிட்டேன். எனவே, நாடாளுமன்ற வளாகத்தில் பெண் எம்.பி.க்களுக்கு தகுந்த பாதுகாப்பை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பான நோட்டீஸை ஏற்கெனவே உங்களிடம் பகிர்ந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு இண்டியா கூட்டணிஎம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொன்யாக்கின் குற்றச்சாட்டுகள் “முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டவை மற்றும் உண்மைகள் அற்றவை என்றும் எதிர்க்கட்சித் தலைவரின் நேர்மையைக் குறைத்து மதிப்பிடும் தீங்கிழைக்கும் முயற்சி” என்றும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியதன் மூலம் காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இரு கட்சிகளின் எம்.பி.க்களும் காலையில் ஒருவரையொருவர் எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரம் முழுவதும் ராகுலுடன் தான் இருந்ததாக ஈடன் கூறினார்.
கொன்யாக் தனது குற்றச்சாட்டை மீண்டும் சபையில் கூறினார், அதற்கு எதிர்க்கட்சிகளின் பெண் எம்.பி.க்களின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
காந்தியின் நடத்தை அநாகரீகமானது மட்டுமல்ல, வெட்கக்கேடானது,” என்று பாஜக எம்.பி.க்கள் விமர்சித்துள்ளனர்.