மும்பை: ஜம்மு காஷ்மீரில், மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் 4-ஆம் தலைமுறையால் கூட கொண்டு வர முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
288 தொகுதிகளைக்கொண்ட காராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் 20ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்தலில் 4140 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத் பாவர், கம்யூனிஸ்டு கட்சிகளைக்கொண்ட இண்டியா கூட்டணி தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகிறது. அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக, சிவசேனா கூட்டணி செயலாற்றி வருகிறது. இதற்கிடையில், பல தொகுதிகளில், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக சிலர் போட்டியிடுகின்றனர். இதனால் சலசலப்பு எற்பட்டுள்ளது.
மும்பை மாகிம் தொகுதியில் போட்டியிடும் சிவசேனா(ஷிண்டே) வேட்பாளர் சதா சர்வான்கரிடம் வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி கட்சி தலைமையும், பா.ஜ.க-வும் கேட்டுக்கொண்டன. ஆனால் வேட்பு மனுவை திரும்ப பெற மறுத்துவிட்டார். இதனால் மாகிம் தொகுதியில் ராஜ்தாக்கரே மகன் அமித் தாக்கரே மும்முனை போட்டியை எதிர்கொண்டுள்ளார். அதுபோல, புனே மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிருப்தி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை கடைசி வரை திரும்ப பெற மறுத்துவிட்டனர்.
இதற்கு மத்தியில் அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரத்தின் சங்க்லி தொகுதியில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆளும் கட்சியான மஹாயுதியின் வேட்பாளர்கள் சுதிர் காடில் மற்றும் சஞ்சய் காகா பாட்டீல் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரித்தார்.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், நாட்டின் வளர்ச்சிக்கும், ஊழற்ற ஆட்சிக்கும், தேசிய ஜனநாய கூட்டணிக்கு வாக்களிக்கும் படி பொதுமக்களிடம் வேண்டிக்கொண்டார். தொடர்ந்து பேசியவர், , “சத்ரபதி சிவாஜியின் மண்ணில் இருந்து சொல்கிறேன். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ இனி ஒருபோதும் கொண்டு வர முடியாது என்றவர், ராகுல் காந்தி மட்டுமல்ல, அவருக்குப்பின்னர் அவரின் வருங்கால சந்ததிகளால்கூட கொண்டுவர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
(முன்னதாக, கடந்த புதன்கிழமை ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவையில் மாநில சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க புதியதாக தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பேரவையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது)
ராகுல் காந்தி அரசியலமைப்பையும், அம்பேத்கரையும், அவரை தேர்தெடுத்த மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி சமீபத்தில் இடஒதுக்கீடு வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். மோடி அரசு இருக்கும் வரை யாராலும் அரசியலமைப்பு மீது கைவைக்கமுடியாது. எஸ்சி, எஸ்டி, இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள் இருந்தபடியே இருக்கும்” என்றார்.