டில்லி
பெண் குழந்தைகள் நல திட்டத்தில் விளம்பரச் செலவு ஏராளமாக செய்ததற்கு பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உள்ளார்.
பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருவதை ஒட்டி மோடியின் மத்திய அரசு ‘பெண் குழந்தைகளை பெறுவோம், பெண் குழந்தைகளை பேணுவோம்’ என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை ஆகிய அமைச்சகங்கள் இணைந்து செயல்பட்டன.
பலராலும் போற்றப்பட்ட இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கிட்டில் 56% தொகை விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் மத்திய இணை அமைச்சர் வீரேந்திர குமார் தெரிவித்துள்ளார். இந்த செய்தி நாடெங்கும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “மோடியை காப்போம், விளம்பரத்தை அளிப்போம்” என பதிவிட்டுள்ளார். மேலும் பெண் குழந்தைகள் நலனுக்கான திட்டத்திலும் விளம்பரம் தேடிக் கொள்ளும் மோடி ஒரு விளம்பரப் பிரியர் எனவும் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே, “பெண் குழந்தைகளை பேணுவோம் என்பது பெண் சிசுக் கொலையை தடுக்கும் திட்டம் என நினைத்தோம். ஆனால் பெண் குழந்தைகளின் கல்விக்காக அமைக்கப்பட்ட ஒரு திட்டம் அரசியல் விளம்பரமாகி உள்ளது” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி டிவிட்டரில், “கடந்த 2014 ஆம் வருடம் 56 இன்ச் அளவுள்ள உடலை கொண்ட பிரதம அமைச்சர் 2019ல் 56% செலவு செய்யும் பப்ளிசிடி அமைச்சராவார் என்பதை யார் நினைத்திருக்க முடியும் ? “ என பதிந்துள்ளார்.