டெல்லி: மத்திய அரசின் பொருளாதார ஊரடங்கு உயிர்பலிகளை அதிகரிக்கக்கூடும் என்பதால், இடம்பெறும் தொழிலாளர்களுக்கான இருப்பிடம், பணம் ஆகியவற்றை மத்திய அரசு அளிக்க ஆவண செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பான அவர் ஒரு நீண்ட கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் ஊரடங்கால் பல ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் வேலை இழந்த சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர், அவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ள விவரங்கள் வருமாறு: கொரோனா பாதிப்பு இருக்கும் இந்த தருணத்தில் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மனிதநேயத்துடன் தொண்டாற்றி வருகின்றனர். நாங்களும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் கூடுமானவரை ஒத்துழைத்து வருகிறோம்.
உலகம் நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அவசியமான, உடனடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். நாடு முழுமைக்குமான ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் சிரமங்களை, பாதிப்புகளை மிகவும் அக்கறையாக பார்க்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவுக்கு பதிலாக மாற்று நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் சூழல் மிகவும் வித்தியாசமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முழுமையான ஊரடங்கை பின்பற்றும் நாடுகள் பின்பற்றுவதை காட்டிலும், வித்தியாசமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். நாள்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்கள், ஏழைகள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பொருளாதாரம் முடக்கப்பட்டு உள்ளது.
முழுமையான பொருளாதார முடக்கத்தின் விளைவானது, கொரோனா பாதிப்பால் உருவாகும் உயிரிழப்புகளைவிட மோசமாக இருக்கும் என்று அஞ்சுகிறேன். திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மக்களிடையே பெரும் பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தொழிற்சாலைகள், சிறு தொழில்கள், கட்டுமான தொழில்கள் மூடப்பட்டதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்துக்குச் செல்கிறார்கள். தினந்தோறும் ஊதியம் இல்லாமல், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யாமல் தொழிலாளர்கள் இருப்பது கடினம்.
நம்முடைய முன்னுரிமை என்பது முதியவர்களை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். வைரசால் அவர்கள் மிக எளிதாக பலியாகக்கூடும். எனவே, இளைஞர்களிடம் இது பற்றி தெளிவாக எடுத்துரைத்து, முதியோருக்கு இருக்கும் ஆபத்தை உணர வைக்க வேண்டும்.
இந்தியாவில் மில்லியன் கணக்கான முதியவர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். ஊரடங்கின் விளைவாக பொருளாதார இயந்திரம் முடக்கப்படும் போது, நிச்சயமாக மில்லியன் கணக்கான வேலையற்ற இளைஞர்கள் தங்கள் கிராமங்களுக்கு விரைந்து செல்வர். இது அவர்களின் பெற்றோர்களுக்கும், அங்கு வாழும் வயதான மக்களுக்கும் தொற்றும் அபாயத்தை அதிகரிக்கும். இதனால் பேரழிவு தரும் உயிர் இழப்பு ஏற்படும்.
எனவே அடுத்த சில மாதங்களுக்கு அவர்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு இருப்பிட வசதி ஏற்படுத்தி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான நிதி உதவி அளிக்கும் அரசின் அறிவிப்பு மிக முக்கியமான முதல் படி. ஆனால் அந்த பணிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும்.
எனவே, அந்த நிதி உதவிகள் எந்தெந்த பகுதிகளுக்கு, எந்த தேதிகளில் அளிக்கப்படும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதிக மக்கள் நெருக்கம் கொண்ட பகுதிகளில் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான படுக்கைகள், வென்டிலேட்டர்கள் வசதிகளுடன் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதே நேரத்தில், கொரோனா தொற்று இருக்கிறதா என்று கண்டறிய மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளை கொண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.
அரசின் திடீர் ஊடரங்கால் மக்களிடையே பீதியும், குழப்பமும் உருவாகி இருக்கிறது. ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் வீட்டு வாடகை தரமுடியாத காரணத்தால் வெளியேற்றப்பட்டு உள்ளனர். எனவே முக்கியமான இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, அவர்களுக்கான வாடகை பணத்தை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைகள், சிறு, குறு ஆலைகள், கட்டுமானபணிகள் நடைபெறும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் பல ஆயிரக்கணக்கான வெளிமாநில மக்கள், பல்வேறு மாநில எல்லைகளை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு உதவிட வேண்டும்.
கொரோனா போன்ற அதிர்வலைகளில் இருந்து, அவர்களை பாதுகாப்பதற்கும், பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதற்கும் ஒரு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.
முறைசாரா பொருளாதாரம், சிறு, நடுத்தர வணிகங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் எந்தவொரு புனரமைப்பு முயற்சிகளுக்கும் இன்றியமையாததாக இருக்கும். எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு மிகவும் நுணுக்கமாக, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.