காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் சென்றடைந்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக அவர் மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.

டல்லாஸ் சென்றடைந்த ராகுல் காந்தியை, விமான நிலையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் (ஐஓசி) தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் வெளிநாட்டு இந்திய சமூகத்தினர் அன்புடன் வரவேற்றனர்.

இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், மாணவர்கள் மற்றும் இந்திய சமுதாய மக்களையும் ராகுல் சந்திக்கிறார்.

டல்லாஸை சென்றடைந்த ராகுல் காந்தி, “இந்தப் பயணத்தின் போது அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் தகவல் உரையாடல்களில் ஈடுபட மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், இது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்தும்” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ‘அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் உள்ள இந்திய சமூகம் மற்றும் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அளித்த அன்பான வரவேற்பால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.