டெல்லி

த்திய அரசு வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 30 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதால் இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. இந்த நிலச்சரிவால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.

ஏராளமான கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டு பலர் காணாமல் போனார்கள். இந்த நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள், காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை.

இன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

“சில நாள்களுக்கு முன்பு, எனது சகோதரியுடன் வயநாடுக்கு சென்றேன். அங்கு சோகத்தால் நிறைந்த வலியையும், வேதனையையும் என் கண்களால் பார்த்தேன். 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்புத்துறை மற்றும் அண்டை மாநிலங்களாக கர்நாடகம், தமிழகம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்டவைகளின் உதவிகளை நான் பாராட்ட விரும்புகிறேன்.

இது மிகப் பெரிய சோகம். வயநாட்டில் பேரிடரை தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்கவும், மக்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கவும் நிதியுதவியை விடுவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறேன்”

என்று பேசியுள்ளார்.