தும்கூர், கர்நாடகா
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தும்கூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து ராகுல் காந்தி உரையாற்றினார். அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி,
”பிரதமர் மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, கர்நாடகா பற்றி பேசவில்லை. அவரைப் பற்றியே பேசுகிறார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது குறித்துப் பேசி இருக்க வேண்டும். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்குள்ள இளைஞர்களுக்காக, கல்விக்காக , சுகாதாரத்திற்காக, ஊழலுக்கு எதிராக என்ன செய்யப்போகிறார் என்பது குறித்துத் தெரிவிக்க வேண்டும்.
இந்த தேர்தல் கர்நாடக மக்களின் எதிர்காலத்திற்கானது; மோடிக்கானது அல்ல. தம்மைக் காங்கிரஸ் கட்சி 91 முறை அவமதித்தாக மோடி கூறுகிறார். ஆனால் கர்நாடகாவிற்கு அவர் என்ன செய்தார் என்பது குறித்துப் பேசவே இல்லை. எனவே அடுத்த முறை நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பது குறித்துப் பேசுங்கள்.
எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, மாநிலத் தலைவர்களைப் பற்றிப் பேசுகிறோம். , நீங்கள் இங்கு வரும்போதெல்லாம் உங்கள் கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குறித்தோ, எடியூரப்பா குறித்தோ பேசாமல் உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள் அது ஏன்?. பசவராஜ் பொம்மை பெயரையும், எடியூரப்பா பெயரையும் இரண்டொரு முறையாவது குறிப்பிடுங்கள். அவர்களும் சந்தோசப்படுவார்கள்.”
எனத் தெரிவித்துள்ளார்.