டெல்லி: ரேப் இன் இண்டியா என்று பேசிய ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆவேசமாக பேசியிருக்கிறார்.
ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் நாட்டில் ரேப் இன் இண்டியா(இந்தியாவில் நடக்கும் பலாத்காரங்கள்) என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு வைரலாகி இருக்கிறது. பாஜக மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியின் பேச்சை கடுமையாக விமர்சித்து ஆவேசமாக பேசினார்.
பெண்களை அவமதித்த அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்களும் அவையில் குரல் எழுப்பினர். தொடர்ந்து ஸ்மிருதி இரானி பேசியதாவது:
ஒரு அரசியல் கட்சியின் தலைவர், இந்தியாவில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று அறை கூவல் விடுத்து பேசுகிறார். வரலாற்றில் முதல்முறையாக, காங்கிரஸ் கட்சியின் அரசியல் தலைவர் ஒருவர் பாலியல் பலாத்காரத்தை பற்றி பேசியிருக்கிறார்.
இந்திய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று காந்தி குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் பொதுவெளியில் பேசியிருக்கிறார். மரியாதைக்குரிய சபாநாயகரை பார்த்து கேட்கிறேன்?
ராகுல் காந்தி இந்த நாடாளுமன்றத்தின் எம்பியாக இருக்கிறார். நாட்டில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய விரும்புகிறார்கள் என்று அவர் சொல்ல வருகிறாரா?
நாடாளுமன்றத்தில் உள்ள ஆண்கள்,பெண்களின் கவுரவத்தை பற்றிய விஷயமல்ல. ஆனால் ஒரு எம்பியாக இருப்பவர் இந்திய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று அவர் வார்த்தைகளை உதிர்க்கிறார்.
நாட்டில் உள்ள எந்த பெண்ணையும் கேளுங்கள்… பாலியல் பலாத்காரம் செய்யப்படுவீர்கள் என்று சொன்னால் அதற்கு எப்படி பதில் அளிப்பது என்று அவர்களுக்கு தெரியும்.
பொதுவெளியில் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்ய வாருங்கள் என்று ஒரு அரசியல் தலைவர் அழைப்பது எவ்வளவு கீழ்த்தரமானது. அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.