டில்லி:
காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை, இதில் பாகிஸ்தானோ, வெளிநாட்டினரோ தலையிட இடமில்லை என்றும், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தின் பிரதான ஆதரவாளர் என்றும் காங்கிரஸ் முன்னள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார்.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சிறப்பு சட்டப் பிரிவு கடந்த 5ந்தேதி (ஆகஸ்டு 2019) ரத்து செய்யப்பட்டு, அது இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, மத்திய மோடி அரசு, “தன்னிச்சையாக ஜம்மூ காஷ்மீர் குறித்து எடுத்துள்ள முடிவால் தேசிய ஒற்றுமை மேம்படவில்லை என்றும், அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறையில் அடைத்ததன் மூலமும் சட்ட சாசனத்தை மீறியதன் மூலமும் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது என்று கூறியிருந்தார்.
மேலும், தேசம் என்பது மக்களால் ஆனது. நிலங்களால் அல்ல. அதிகாரம் இப்படி பயன்படுத்தப் பட்டது தேசிய பாதுகாப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தயாவுடனான வர்த்தகம், போக்குவரத்து உள்பட பல உறவுகளை பாகிஸ்தான் முறித்து வருகிறது. மேலும் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக எடுத்த முயற்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாயாவதி உள்பட பல எதிர்க்கட்சிகள் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலை யில், காங்கிரஸ் கட்சியிலும் பல மூத்த தலைவர்கள் மத்தியஅரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், அமெரிக்க டிரம்பிடம் நேரடியாகவே, காஷ்மீர் பிரச்சினையில் 3வது நாடு தலையிடு வதை விரும்பவில்லை என்று கறாராக தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் ராகுல்காந்தி தற்போது காஷ்மீர் குறித்து தெளிவான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
அதில், காஷ்மீர் மீதான தனது நிலைப்பாட்டில் நாடு ஒன்றுபட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினை யில் எந்த வெளிநாட்டு நாடும் தலையிட வாய்ப்பில்லை என்றும், ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது, ஏனெனில் இது பாக்கிஸ்தானால் தூண்டப்பட்டு ஆதரிக்கப்படுகிறது, பாகிஸ்தானை ‘பயங்கரவாதத்தின் பிரதான ஆதரவாளர்’ என்றும் கூறி உள்ளார்.
மேலும், “பல விஷயங்களில் நான் இந்த அரசாங்கத்துடன் உடன்படவில்லை. ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலையை முற்றிலும் தெளிவுபடுத்துகிறேன்: காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை மற்றும் பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிலோ தலையிட இடமில்லை ”என்று காந்தி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஆரம்பத்தில் மத்தியஅரசு எதிராக பேசி வந்த ராகுல்காந்தி தற்போது மத்திய அரசின் கருத்தை ஏற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.