சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தருகிறார். காலை 11 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்குவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே முதல்கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார். இந்த நிலையில், 2-ம் கட்டமாக 3 நாள் தென்மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகை தருகிறார்.
தனி விமானம் மூலம் இன்று காலை 11 மணி அளவில் தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி. இன்று முற்பகல் தூத்துக்குடியில் பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
பின்னர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே ரோடு ஷோ மூலம் மக்களிடையே நடந்து சென்று ஆதரவு திரட்டுகிறார்.
தொடர்ந்து தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து மாலையில் நெல்லை மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் ராகுல்காந்தி இட்டமொழி, மன்னார்புரம் விலக்கு, பரப்பாடி வழியாக சென்று, நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இரவில் நெல்லையில் உள்ள விடுதியில் ஓய்வு எடுக்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார். பின்னர் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
அங்கிருந்து திறந்த வேனில் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு மக்களிடையே பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் நெல்லையில் இருந்து கார் மூலம் ஆலங்குளம், சுரண்டை பகுதிகளுக்குச் சென்று பீடி தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். இரவில் குற்றாலத்தில் தங்குகிறார்.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் ராகுல்காந்தி குற்றாலத்தில் இருந்து கடையத்துக்கு சென்று ரோடு ஷோ முறையில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து அம்பை, சேரன்மாதேவி, வள்ளியூரில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி பின்னர் நாகர்கோவிலுக்கு செல்கிறார்.
மாலை 4:30 மணியளவில், நாங்குநேரி நான்கு வழிச்சாலை பகுதியில் பிரச்சாரபொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இரவு நெல்லை தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை மறுதினம் குமரி மாவட்டத்திலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ராகுல்காந்தி வருகையையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் காங்கிரசார் வரவேற்பு பேனர்கள், கட்சிக்கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் அமைத்துள்ளனர். ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.