டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜிஎஸ்டியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில்

“ஜி.எஸ்.டி. என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிந்தனையில் உதித்தது. இந்திய சந்தைகளை ஒன்றிணைக்கவும், வரிவிதிப்பை எளிமைப்படுத்தவும் நோக்கம் கொண்டிருந்தது. ஆனால், மோசமான அமலாக்கம், அரசியல் பாகுபாடு, அதிகாரிகள் அத்துமீறல் ஆகியவற்றால் அந்த வாக்குறுதிக்கு மோடி அரசு துேராகம் செய்து விட்டது.

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. மோடி அரசின் ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தம் அல்ல, பொருளாதார அநீதி, கார்ப்பரேட் நட்பு ஆகியவை அடங்கிய கொடூர ஆயுதம். ஏழைகளை தண்டிக்கவும், சிறு, குறு நிறுவனங்களை நசுக்கவும், மாநிலங்களை சிறுமைப்படுத்தவும், கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவவும் கொண்டுவரப்பட்டது.

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு 18 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. டீ முதல் சுகாதார காப்பீடுவரை பொதுமக்கள் வரி செலுத்தி வருகிறார்கள். ஆனால், கார்ப்பரேட்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வரிச்சலுகை பெறுகிறார்கள்.

வேண்டுமென்றே, பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. இதனால், விவசாயிகள், லாரி அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்க ஜி.எஸ்.டி. பாக்கி வைக்கப்பட்டுள்ளது. காராமல் பாப்கார்ன், கிரீம் பன் ஆகியவற்றுக்குக்கூட வரி விதிக்கப்படுகிறது. ஆகவே, ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.”

எனப் பதிவிட்டுள்ளார்.